முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல்!
நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகள் மற்றும் 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் எதிர்வரும் 21ம் திகதி திறக்கப்பட்டு கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளை ஆரம்பித்தல் தொடர்பான ஆரம்ப கலந்துரையாடலானது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்று(06) இடம்பெற்றது.
இதன்போது பின்வரும் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு பாடசாலை கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
*ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
*நீண்டகாலமாக பாடசாலைகள் திறக்கப்படாதிந்ததால் முன்னாயத்தமாக சிரமதான பணி மேற்கொள்ளப்பட வேண்டும்.
*தற்போது டெங்கு பரவும் காலநிலை ஆரம்பித்திருப்பதனால் டெங்கு பெருகும் இடங்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.
*பாடசாலைக்கு உள்வரும் பிரதான நுழைவாயில் மற்றும் வகுப்பறைகளில் தொற்று நீக்கும் திரவங்கள் சரிவர பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் சிறு பிள்ளைகள் பாடசாலைக்கு வருவதனால் வீடியோக்கள் மூலமாக சுகாதார நடைமுறைகளை அவர்களுக்கு வீடியோ ஊடாக காட்டுவதனால் அவர்களை சரிவர செயற்படுத்த முடியும்.
*சமூக இடைவெளிகள் கட்டாயமாக பேணப்பட வேண்டும்.
*கழிவகற்றல் செயற்பாடுகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும் குறிப்பாக மாணவர்கள் பயன்படுத்திய முகக்கவசங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
*கொரோனா தொற்றினால் ஏற்படுகின்ற அறிகுறிகள் குறித்து ஆசிரியர்கள்அதிக அவதானத்தை செலுத்துவது நல்லது. குறிப்பாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகள் அவர்களது குடும்பத்தில் யாருக்காவது ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அறிவது சிறந்தது.
*இதனைவிட சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர் ஆகியோரிடம் தொடர்பில் இருக்க வேண்டும்.
*பெற்றோர்கள் வாகனங்கள் மூலம் பிள்ளைகளை கொண்டு வரும்போது அங்கு ஏற்படக்கூடிய சமூக இடைவெளிகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.
*மாணவர்கள் உணவருந்தும் இடங்களில் அதிக சமூக இடைவெளிகள் பேணப்பட வேண்டும்.
*கிணறுகள் நீண்டகாலமாக பயன்படாதிருப்பதனால் குளோரின் இட்டு அவற்றை தூய்மைப்படுத்துவது சிறந்ததாகும்.
இவற்றை பாடசாலைகளில் பின்பற்றச் செய்வதிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.எம். உமாசங்கர், மாவட்ட தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி Dr.வி.விஜிதரன்,பிரதேச வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்.தமிழ்மாறன், துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.முகுந்தன் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.