வயற்காணிகளை மக்களுக்குக் கையளிக்கும் சாத்தியம்குறித்து நேரில் ஆராய்வு.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பணிப்பில், கரைச்சிப் பிரதேச செயலகப் பிரிவுக்குள் இருக்கும் ஆனைவிழுந்தான் வயற்காணியை மக்களுக்கு மீள வழங்கக்கூடிய சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு நேரில் அங்கு சென்றிருந்தது.
கரைச்சிப் பிரதேச செயலாளர் பாலசிங்கம் ஜெயகரன் தலைமையில், காணி உத்தியோகத்தர், வனவளத் திணைக்களப் பணிப்பாளர், கிராமசேவையாளர் ஆகியோருடன், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் ஆகியோர் இணைந்த குழுவினர் உள்ளூர் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் ஆனைவிழுந்தான் வயல்காணி பிரதேசத்தைப் பார்வையிட்டனர்.
அந்தப் பகுதியில் கடந்த காலத்தில் வயற்செய்கை நடைபெற்றமைக்கான ஆதாரமாக, கொங்கிறீட் கட்டுமானங்களாக நீர்விநியோக வாய்க்கால்கள் இருப்பதை இதன்போது பிரதேச செயலாளர், அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் ஆகியோர் வனவளத் திணைக்கள பணிப்பாளரிடம் சுட்டிக்காட்டினர்.
இந்தப் பகுதியில் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் நெற்செய்கை இடம்பெற்றதாகவும், பின்னர் மோதல் சூழல்களால் மக்கள் இடம்பெயர்ந்த காரணத்தினால் அது கைவிடப்பட்டதாகவும் பிரதேச வாசிகளும், முன்னாள் கிராமசேவையாளர்களும் எடுத்துக் கூறினர்.
இவற்றைச் செவிமடுத்த வனவளத் திணைக்களப் பணிப்பாளர் மகேஷ் சேனநாயகா, இதுபற்றிய விரிவான அறிக்கையொன்றை தமக்குத் தருமாறு பிரதேச செயலாளரிடம் கோரியதுடன், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கமைய அந்த வயற்காணிப் பகுதியில் மீண்டும் நெற்செய்கையில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் குறித்து விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இம்முறை காலபோகத்துக்கு அந்தப் பகுதி விவசாயிகளுக்கு வயல்காணிகளை வழங்கவேண்டும் என்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் எண்ணதை வனவளத் திணைக்களப் பணிப்பாளரிடம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் அவர்கள் எடுத்துக்கூறியதுடன், துரிதமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.