வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதி வேண்டும் – பிரியங்கா காந்தி
வன்முறையில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை, நீதி வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் தெரிவித்தனர். முன்னதாக கடந்த இருதினங்களுக்கு முன்பு இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்று பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் அவரை கைது செய்த உத்தரபிரதேச காவல்துறையினர் சிதாப்பூர் பகுதியில் சுமார் 40 மணி நேரமாக தடுத்து வைத்திருந்தனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நேற்று உத்தரப்பிரதேசம் வந்தனர். லக்னோ விமான நிலையம் விட்டு வெளியே செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. உத்தரப்பிரதேச காவல்துறையின் நடவடிக்கையை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இரவு 10 மணியளவில் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ராகுல், பிரியங்கா இருவரும் ஆறுதல் தெரிவித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “ வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தேவையில்லை. அவர்களுக்கு நீதி வேண்டும். அஜய் மிஸ்ரா மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் அது சாத்தியமில்லை. எஃப்ஐஆர் இல்லாமல் எங்களை கைது செய்யும்போது, ஏன் அவரை கைது செய்ய முடியாது” என்று கேள்வி எழுப்பினார்.