கடந்த அத்திவரதர் வைபவத்தின் போது அதிக லாபம் ஈட்டிய துணிக்கடைகளை, நிதி நிறுவனங்களை குறிவைத்து வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை
2019 ஆம் ஆண்டு நடந்த அத்திவரதர் வைபவத்தில் உலகம் முழுவதிலிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். 40 நாட்கள் நடந்த இந்த வைபவத்திற்கும், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடக்கும் வருமானவரித்துறை சோதனைக்கும் தொடர்பு உள்ளது.
காஞ்சிபுரத்தின் பிரபல துணிக்கடையான பச்சையப்பாஸ் சில்க்ஸ், செங்கல்வராயன் சில்க்ஸ், எஸ்.கே.பி நிதி நிறுவனங்கள் தொடர்புடைய 30 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கணேஷின் வீடு, கடைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள். அதேபோல், டி.செங்கல்வராயன் சில்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மோகன்ராஜின் வீடு மற்றும் கடைகளில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டுவருகிறார்கள்.
மேலும், எஸ்.கே.பி சினிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நடத்திவரும் எஸ்.கே.பி நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்துவருகிறது. வருமான வரி துறையினர் திடீர் சோதனையில் சிக்கியுள்ள எஸ்.கே.பி.சினிவாசன், திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருக்கிறார்.
வேலூர், சென்னையில் உள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகங்களில் 20க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். இப்படி, மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்திவரதர் வைபவத்தையொட்டி 40 நாட்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் அளவுக்கு துணி விற்பனை ஆகியுள்ளதாகவும், ஆனால், முறையாக வருவாய் காட்டப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆர்.டி.ஐயின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் படி கோவில் நிர்வாகம், மாவட்ட ஆட்சியரகம் வி.ஐ.பி, வி.வி.ஐ.பி பாஸ்களை அச்சிட்டு விற்பனை செய்யவில்லை. ஆனால், சட்டவிரோத கும்பல் ஒன்று வி.ஐ.பி, வி.வி.ஐ.பி டிக்கெட்டுகளை அச்சடித்து விற்பனை செய்து அதிலும் ஒரு பெரிய தொகை ஈட்டப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெளியூர் பக்தர்களிடம் பேக்கேஜ் பேசி அவர்களிடமும் மோசடி செய்து, பெரிய தொகையை சிலர் சம்பாதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகள் பரிசு என்றெல்லாம் கவர்ந்திலுக்கும் ஆபர்களை கொடுத்து மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது.