பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
ஆர்.சி.பி. அணிக்கு கடைசி நான்கு ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்தது. ஜேசன் ராய் 44 ரன்களும், கேன் வில்லியம்சன் 31 ரன்களும் அடித்தனர். ஆர்.சி.பி. அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டும், கிறிஸ்டியன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிறிஸ்டியன் டேனியல் ஒரு ரன்னிலும், ஸ்ரீகர் பரத் 12 ரன்னிலும் வெளியேறினர்.
இதனால் ஆர்.சி.பி. 38 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல் உடன் மெக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக மேக்ஸ்வெல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆர்.சி.பி. அணி வெற்றியை நோக்கி சென்றது.
15-வது ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல ரன்அவுட் ஆனார். அவர் 25 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்கள் விளாசினார். அவர் ஆட்டமிழக்கும்போது ஆர்.சி.பி. 14.1 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 35 பந்தில் 49 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார்.
ஆர்.சி.பி. அணிக்கு கடைசி நான்கு ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்தார். அவர் 52 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். அப்போது ஆர்.சி.பி.க்கு 19 பந்தில் 33 ரன்கள் தேவைப்பட்டது. 20 ஓவர் முடிவில் ஆர்.சி.பி. 137 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.