அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாஜகவினர் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் அனைத்து நாட்களிலும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் தீச்சட்டிகளை ஏந்தி, அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க அரசு 10 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் எனவும் இல்லையெனில் தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரித்தார்.
இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயில் முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜக தொண்டர்கள் கடவுள் வேடமணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், கொரோனா காலத்தில் மனித உயிர்கள் காக்கப்படுவது போல் மனித உரிமைகளும் காக்கப்பட வேண்டும் என கூறினார். கோயில் வழிபாட்டிற்கு தடை விதித்துள்ளது தமிழக அரசின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல எனவும் எனவே அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க முதலமைச்சர் ஆணையிட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதேபோல, கோவையில் தண்டு மாரியம்மன் கோவில் அருகில் திரண்ட 200-க்கும் மேற்பட்ட பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் தீச்சட்டி ஏந்திப் பங்கேற்றனர். மேலும், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி; பள்ளிகளுக்கு அனுமதி; ஆனால் கோவில்களை திறக்க மட்டும் தடையா? என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக காளி நடனம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.