சென்னையை அடித்து நொறுக்கிய ராகுல்: கடைசி ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கேப்டன் கேஎல் ராகுலின் மிரட்டல் அடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல்-இன் இன்றைய (வியாழக்கிழமை) முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது.
135 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பஞ்சாப் தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம்போல் கேஎல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர்.
முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்து இன்றைய நாள் தனது நாள் என்பதை ராகுல் உறுதி செய்தார். அகர்வால் வேடிக்கைப் பார்க்க ராகுல் பவுண்டரிகளாக அடித்துத் தள்ளினார்.
4 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்ததால், 5-வது ஓவரில் ஷர்துல் தாக்குர் அறிமுகப்படுத்தப்பட்டார். இதற்குப் பலனாக அகர்வால் (12), சர்பிராஸ் கான் (0) ஆகியோர் அந்த ஓவரில் ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு, ஷாருக் கானை வேடிக்கைப் பார்க்க வைத்து மீண்டும் தனது அதிரடியைத் தொடர்ந்தார் ராகுல். அவர் தனது 25-வது பந்தில் அரைசத்தை எட்டினார். ராகுலுக்கு ஒத்துழைப்பு தர வேண்டிய ஷாருக் கான் அடித்து ஆட முயற்சித்து 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் விழுந்ததால், அடுத்து களமிறங்கிய எய்டன் மார்கிரமையும் வேடிக்கைப் பார்க்கச் சொல்லி தானே அதிரடியாக ரன் குவித்தார். ஒரு கட்டத்துக்குப் பிறகு சிக்ஸர்கள் மூலம் ரன் குவிக்கத் தொடங்கியதால் பஞ்சாப் மாபெரும் வெற்றிக்குத் தயாரானது.
8 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 9 ரன்களே தேவைப்பட்ட நிலையில், மார்கிரமும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், அதே ஓவரில் பவுண்டரியும், சிக்ஸரும் பறக்கவிட்டு வெற்றியை உறுதி செய்தார் ராகுல்.
13 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்த பஞ்சாப் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுல் 42 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட மொத்தம் 98 ரன்கள் விளாசினார்.