ஐ.பி.எல் தொடரில் பும்ராவின் சாதனையை தகர்த்த ஹர்ஷல் பட்டேல்.
ஐபிஎல் தொடரின் 52-வது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது 141 ரன்களை குவித்தது.
அதிகபட்சமாக துவக்கவீரர் ஜேசன் ராய் 44 ரன்களும், வில்லியம்சன் 31 ரன்களும் குவித்தனர். பெங்களூர் அணி சார்பாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷல் பட்டேல் மூன்று விக்கெட்களையும், கிறிஸ்டியன் இரண்டு விக்கெட்டுகளையும் சாஹல் மற்றும் கார்ட்டன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணியானது 20 ஓவர்களின் முடிவில் 137 ரன்களை மட்டுமே குவித்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் ஐபிஎல் தொடரில் பும்ராவின் முக்கியமான சாதனையை முறியடித்துள்ளார்.
அந்த சாதனை யாதெனில் இதுவரை நடைபெற்றுள்ள இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் எடுத்த 3 விக்கெட்டுகளோடு சேர்த்து ஹர்ஷல் பட்டேல் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு 2020-ஐபிஎல் தொடரில் பும்ரா 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்ததே இந்திய வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரின் ஒரே சீசனில் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாக இருந்தது.
இதனை தற்போது ஹர்ஷல் பட்டேல் 29 விக்கெட்டுகள் மூலம் முறியடித்துள்ளார். இதுமட்டுமின்றி லீக் சுற்றில் ஒரு போட்டியும், பிளேஆப் போட்டியும் எஞ்சியுள்ள நிலையில் பிராவோவின் 32 விக்கெட்டுகள் சாதனையை அவர் தகர்க்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.