பிரபாகரனை மீட்க அனுமதி வழங்காததாலேயே இலங்கைக்கு எதிராக சர்வதேசம் போர்க்கொடி!
“அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், இறுதிப் போர்க்காலத்தில் போரை நிறுத்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்தபோது அதற்கு இலங்கை அரசு அனுமதிக்காமையின் காரணமாகவே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றனர்.”
இவ்வாறு அரச தரப்பு எம்.பி. எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அவர் மேலும் கூறியதாவது:-
“அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இறுதிப் போர்க் காலத்தில் பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சித்தார்கள். போரை நிறுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். குறிப்பாக பிரபாகரனின் குடும்பத்தினரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு போரை நிறுத்த முயற்சித்தார்கள். ஆனால், சர்வதேசத்தின் எந்தவிதமான முயற்சிகளுக்கும் இலங்கை அரசு அனுமதிக்கவில்லை.
பிரபாகரனைக் காப்பாற்றும் சர்வதேசத்தின் முயற்சிகளைத் தோற்கடித்துவிட்டு இலங்கை இறுதிப் போரை வெற்றிகொண்டது. இதனாலேயே அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் இலங்கை மீது கோபத்தில் இருக்கின்றன. இதனாலேயே ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன” – என்றார்.