கும்பகோணத்தில் ஓடும் ஆட்டோவிற்கு, விதிகளை மீறியதாக மதுரையில் அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறை
ஊழியர்கள் நியமனத்தில் முறைகேடு, கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக மூன்றேகால் கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கியது ஆகியவை தொடர்பாக, சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை துணை வேந்தராக பணியாற்றியவர் சாமிநாதன். அப்போது, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் நியமனம் செய்ததில் முறைகேடு நடந்ததாக சென்னை ஊழல் தடுப்பு இயக்குனரகத்திற்கு பலரால் புகார் அனுப்பப்பட்டது.
விசாரணையில், பேராசிரியர் மற்றும் விரிவுரையாளர் பணிகளுக்கு 154 பேர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணிக்கு 47 பேர் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டது தெரியவந்தது. இவர்கள், போலி சான்றிதழ்கள் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில் தற்போது முன்னாள் துணை வேந்தர் சாமிநாதன், முன்னாள் பதிவாளர் அங்கமுத்து ஆகியோர் மீது கூட்டு சதி, ஏமாற்று வேலை, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில், சேலம் மாவட்ட லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே 2016 முதல் 2019 ம் ஆண்டு வரையிலான கல்வியாண்டுகளில் முறையான கட்டமைப்பு இல்லாத கல்லூரிகள் தொடங்கவும், கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் முறைகேடாக அனுமதி அளித்து இருப்பது அம்பலமாகியுள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆ கிய 4 மாவட்டங்களில் 5 கல்லூரிகளில் 3.26 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்று இருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது
இதுதொடர்பான வழக்கிலும் சாமிநாதன், அங்கமுத்து மற்றும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் லீலா ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பதிவாளர் அங்கமுத்து தன் மீதான புகார்களுக்கு பயந்து கடந்த 2017-ம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் மற்ற இருவர் மீதான வழக்குகள் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.