திறைசேரியின் செயலாளருக்கு எதிராக தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் முறைப்பாடு!
கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவுக்கு எதிராக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அமைப்புகளின் கூட்டணியான தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியமே மேற்படி முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி ஒன்றியத்தின் இணைப்பாளர் பெங்கமுவ நாலக்க தேரர் கூறியதாவது:-
“அமெரிக்கா தனக்குத் தேவையான பயனையே அந்தத் திட்டத்தின் ஊடாக அடையும். அமெரிக்காவானது ஒருபோதும் ஆசிய நாடுகளுக்குச் சார்பாக செயற்பட்டது கிடையாது. மிகவும் இரகசியமான முறையிலேயே இதற்கான கொடுக்கல் – வாங்கல் இடம்பெற்றுள்ளது. இது ஏன்? மக்கள் பிரதிநிதிகளுக்குக்கூட இது பற்றி தெரியாது.
எனவே, குறித்த உடன்படிக்கையைச் செயற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம். இது தொடர்பில் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்.
‘விற்கப்படவில்லை’ என்ற சொற்பதம் ஆளுந்தரப்பால் பயன்படுத்தப்படுகின்றது. விற்றால் என்ன, குத்தகைக்கு வழங்கினால் என்ன அவர்கள் பயன்பெற்றுவிடுவார்கள்” – என்றார்.