13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுலாகுமா? லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. கேள்வி.
“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் திருமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்கியது போன்று அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் முழுமையாக அமுல்படுத்தப்படுமா?”
இவ்வாறு எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யுமான லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போதே வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் இடையீட்டு கேள்வியொன்றை எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரமே திருக்கோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவுக்கு வழங்கியுள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில இங்கு கூறியுள்ளார். அவ்வாறெனின் இந்திய – இலங்கைக்கிடையிலான ஒப்பந்தத்தின் மூலம் உருவான 13ஆவது திருத்தச் சட்டமும் அவ்வாறே நடைமுறைப்படுத்தப்படுமா?” என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்த வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில, “பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல எனது உரையை ஒழுங்காகச் செவிமடுத்திருக்கவில்லை என்பதை அவரது வயதை வைத்து நான் உணர்ந்துகொள்கின்றேன். ஏனெனில் அவர் தவறாகவே புரிந்து கொண்டுள்ளார்.
2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த உடன்படிக்கையை பாராளுமன்றிலும் சமர்ப்பித்துள்ளேன். 100 எண்ணெய்க் குதங்களையும் கொடுக்கவில்லை. 15 எண்ணெய்க் குதங்களைத்தான் கொடுத்தோம். 2023இல் அவை மீளக் கிடைத்துவிடும் எனக் கூறியிருந்தனர். கபீர் ஹாசிம் எம்.பிக்கு குறித்த உடன்படிக்கையை சபைக்குச் சமர்ப்பிக்குமாறு சவாலொன்றையும் விடுத்திருந்தேன்” – என்றார்.
இதன்போது மீண்டும் குறுக்கிட்ட லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., “அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எப்போதும் எனது வயதுதான் தெரிகின்றது. ஆனால், அவரின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவிட நான் இளையவன் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துகின்றேன்” – என்றார்.