மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் எடுத்தது!
மத்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கு மத்திய அரசு நீண்ட காலமாக முயன்றுவருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கிய இந்த விற்பனை நடவடிக்கை கொரோனா தொற்று காரணமாக தாமதமானது.
பின்னர் கடந்த ஏப்ரல் மாதம் இந்த பணிகளை முடுக்கி விட்ட மத்திய அரசு, இதற்கான இறுதி ஏல விவரங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தியது. இதற்கு செப்டம்பர் 15-ந் தேதி இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இதில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்குவதற்கு டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.
இந்த நிலையில், ஏர் இந்தியாவை வாங்கும் டாடா குழுமத்தின் ஏல திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்தத் தகவலை ப்ளூம்பெர்க் மற்றும் மனி கண்ட்ரோல் செய்தி நிறுவனங்கள் உறுதிப்படுத்தியிருந்தன. ஜே.ஆர்.டி டாடாவில் 1932-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத்தான் மத்திய அரசு 1953-ம் ஆண்டு நாட்டுடமையாக்கியது.
இதுவரையில் ஏலத்தில் டாடா குழுமம் தான் அதிகபட்ச விலைக்கு கோரியுள்ளதாகவும், இதுதொடர்பாக அமித்ஷா தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ஏலத்தில் எடுத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டாடா நிறுவனத்தின் ஏலத்தொகையை ஏற்றதாக விமான போக்குவரத்துறை செயலாளர் அறிவித்துள்ளார். தொடர்ந்து, ஏலம் வெளிப்படைத் தன்மையுன் நடைபெற்றதாக விமான போக்குவரத்து துறை செயாலளர் அறிவித்துள்ளார்.
இதையடுத்து, 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா நிறுவனத்தின் வசமாகிறது.
ரூ.70,000 கோடி நஷ்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளும், கிட்டதட்ட ரூ.20 கோடி இழப்பீட்டை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.