கோவிட் தொடர்பான மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு சிங்கப்பூர் நன்கொடை….
ஹென்றி பே மற்றும் சிங்கப்பூர் நலன் விரும்பிகளிடமிருந்து 250 ஒட்சிசன் செறிவூட்டிகள் உள்ளடங்கலான கோவிட்-19 தொடர்பான மருத்துவ உபகரணங்களை சிங்கப்பூரின் மஹா கருண பௌத்த சங்கத்தின் மத ஆலோசகர் வணக்கத்திற்குரிய கலாநிதி.கே.குணரதன தேரின் அனுசரணையுடன், சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நன்கொடையாகப் பெற்றுக் கொண்டது.
திருமதி. ராகுல் ரூஹீ தகாஹாஷியினால் நன்கொடையளிக்கப்பட்ட 20 ஒட்சிசன் செறிவூட்டிகளும் மேலும் நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூரின் இந்த நன்கொடையானது கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்ற விழாவில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான சிங்கப்பூரின் கௌரவ தூதுவர் ஜயந்த தர்மதாச வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவிடம் நன்கொடைகளைக் கையளித்தார். பின்னர், உற்பத்தி, வழங்கல் மற்றும் மருத்துவக் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி. ஆர்.எம்.எஸ்.கே. ரத்நாயக்க ஆகியோரிடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் உதவியுடன் இந்த நன்கொடைகளை விமானத்தில் அனுப்பி வைப்பதற்கு சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தது.