பிரபாகரனுக்கு முதலாவது பாடம் கற்பித்தவர் உங்கள் தந்தை யொஹானியை வாழ்த்திய பொன்சேகா.
இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வாவின் தந்தை பிரசன்ன சில்வா, மாவிலாற்றைக் கைப்பற்றி பிரபாகரனுக்கு முதலாவது பாடத்தைக் கற்பித்தவர் என்று முன்னாள் இராணுவத்தளபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யொஹானிக்கு வாழ்த்துத் தெரிவித்து சரத் பொன்சேகா தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொன்சேகா அந்தப் பதிவில்,
“விசேட படையணின் தளபதி என்ற வகையில் உங்கள் தந்தை பிரசன்ன டி சில்வாவை, 2006 ஆம் ஆண்டில் மாவிலாற்றை மீட்பதற்காக வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு அழைத்தேன்.
அதனைத் தொடர்ந்து, விசேட படையணியுடன், பீரங்கி, விமானப்படையின் உதவியுடன் மாவிலாற்று அணைக்கட்டை படையினர் மீட்டெடுத்தனர்.
அன்று மனிதாபிமான காரணங்களைப் போர்க் காரணிகளாக மாற்றக்கூடாது என்ற முதலாவது பாடம் பிரபாகரனுக்குக் கற்பிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, “பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி, வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்து நடவடிக்கைகளிலும் சிறப்புப் படைகளை வழி நடத்தியவர்” என்றும் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று, இறுதிப்போரில் 55 மற்றும் 59 ஆம் படையணி தளபதியாக முக்கிய பங்களிப்பை அவர் வழங்கினார் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதன்படி அன்று அவரின் வீரத்துடன் இராணுவத்தினர் வெற்றியடைந்ததைப் போன்று, இன்று சர்வதேச இசை மேடைகளில் யொஹானி தாய்நாட்டுக்குப் பெற்றுக்கொடுப்பது பெருமையும் வெற்றியுமே ஆகும் எனவும் சரத் பொன்சேகா தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.