பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிரட்டல் வெற்றி.
14வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளன, இறுதி இரண்டு லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
இறுதியாக இடம்பெற்ற 56 வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஒரு விறுவிறுப்பான சம்பவம் பதிவானது.
இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ வீரர்கள் வெற்றியை பெறுவதற்கு முன்னர், இறுதி இலக்கை எட்டுவதற்கு முன்னரே வெற்றியை கொண்டாட ஆரம்பித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
விளையாட்டைப் பொறுத்த வரையில் இலக்கை எட்டும் வரை நாம் வெற்றியை கொண்டாடக்கூடாது என்கின்ற பாடம் இன்றைய போட்டி மூலமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகுக்கும் கற்பிக்கப்பட்டு இருக்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி மிகச்சிறப்பாக 164 ரன்களை பெற்றது, 165 எனும் வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மேக்ஸ்வெல் மற்றும் பரத் ஆகியோர் மிகச்சிறப்பாக சத இணைப்பாட்டம் புரிந்து மிரட்டினர்.
போட்டியில் இறுதி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது, 19-வது ஓவரை வீசிய அண்ட்ரீச் நோக்கியா 4 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இதில், கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவை எனும் விறுவிறுப்பான நிலைக்கு போட்டி சென்றது.அப்போதே, டெல்லி வீரர்கள் வெற்றியை கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.
குறிப்பாக, 4வது பந்தை, பரத் அடிக்காமல் தவற விட்டபோது, பந்துவீசிய ஆவேஷ் கான் பரத்தைப் பார்த்து நக்கலாக சிரித்தேவிட்டார். அதன் பிறகு, 5வது பந்தில் சொதப்பல் ஃபீல்டிங் செய்த அக்ஷர் படேல், 1 ரன் மட்டும் கொடுத்திருக்க வேண்டிய இடத்தில், மோசமான ஃபீல்டிங்கால் 2 ரன்கள் எடுக்க அனுமதித்தார்.அதற்காக அவர் வருத்தப்படவில்லை. மாறாக, அக்ஷர் சிரித்துக் கொண்டிருந்தார்.
சிலவேளைகளில் மேக்ஸ்வெல் ஸ்ட்ரைக்கில் நிற்பதை தவிர்க்கும் உக்தியாகவும் இருந்திருக்கலாம்.
கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஆவேஷ் கான் வைட் வீச, வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் எனும் நிலை ஏற்பட்டது.
இதனால் பதட்டத்தில் ஆவேஷ் கான் ஃபுல் டாஸ் வீச, அதனை பரத் ஸ்டிரெய்ட்டில் தூக்கி அபார சிக்ஸ் அடித்தார், இதனால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மிரட்டல் வெற்றி பெற்றது.
52 பந்துகளை சந்தித்த பரத், 78 ரன்கள் விளாசினார். இதில், 3 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். எனினும், இந்த வெற்றி இரு அணிகளையும் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.
டெல்லி அணி முதலிடத்தில் நீடிக்க, பெங்களூர் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
வருகின்ற 10ஆம் திகதி டெல்லி அணி சென்னை அணியுடனான போட்டியில் குவாலிபயர் ஆட்டத்தில் விளையாட உள்ளது, இதே நேரத்தில் 11 ஆம் திகதி கொல்கத்தா, ஆர்சிபி அணிகள் எலிமினேட்டர் ஆட்டத்தில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.