ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுக! கஜேந்திரகுமார் வலியுறுத்து.
ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு செவிமடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பியுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் மிகப்பெரிய நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனைத் தீர்க்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதுள்ளது.
காலையில் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அரச தரப்பினர், நவம்பரில் முன்வைக்கவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் இதற்கான தீர்வுகளை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.
தீர்வுகளை வழங்குவதென்றால் நவம்பர் வரையில் கால அவசகாசம் வழங்குவத எதற்கு? ஆசிரியர் சங்கங்களை அழைத்து இப்போதே அதற்கான வாக்குறுதியை வழங்கி நெருக்கடிகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும்,
ஆசிரியர் சங்கங்கள் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகின்றனர், அதேபோல் 2018ஆம் ஆண்டு முன்னைய அரசு முன்வைத்த யோசனையை அரசு நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவதில் நியாயம் இல்லை.
அதுமட்டுமல்ல, ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இது முற்று முழுதாக ஆசிரியர் சங்கங்களை சமூகத்துக்கு எதிராகத் திசை திருப்பும் நோக்கமேயாகும்.
பல்வேறு அபிவிருத்தி வேலைதிட்டங்களுக்காகப் பல மில்லியன் ரூபாக்களை அரசு ஒதுக்குகின்ற நிலையில், பல மில்லியன் ரூபா கறுப்புப்பணம் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைச் செவிமடுக்காது அரசு செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது.
கடந்த 2018ஆம் ஆண்டு முன்னைய அரசு ஆரிசியர் பிரச்சினைகள் குறித்து முன்வைத்த யோசனைகளை ஏற்றுக்கொள்வதாக ஆரிசியர் சங்கங்கள் கூறியுள்ளன. ஆகவே, அரசு இந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.