நெல்சனின் “டாக்டர்” படத்தின் விமர்சனம்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாக்டர் படத்தின் விமர்சனம்.
ராணுவத்தில் டாக்டராக இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஒரு நிகழ்ச்சியில் நாயகி பிரியங்கா மோகனை சந்தித்து காதல் வயப்படுகிறார். இவர்கள் திருமணம் செய்வதற்கு முன், சில காரணங்களால் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில், பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார்.
இவரின் அண்ணன் மகளை தேடும் பணியில் சிவகார்த்திகேயன் ஈடுபடுகிறார். இந்த தேடுதலில் பல திடுக்கிடும் தகவல்களும், மர்மங்களும் சிவகார்த்திகேயனுக்கு தெரிய வருகிறது. இறுதியில் நாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகளை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சிவகார்த்திகேயன் கடத்தல் கும்பலை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், தன்னுடைய வழக்கமான நடிப்பு பாணியில் இருந்து விலகி வேறொரு கோணத்தில் நடித்து அசத்தி இருக்கிறார். கலகலப்பு காமெடி என இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள்.
நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன், நல்ல அறிமுகத்தை கொடுத்து இருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் வினய். பல இடங்களில் இவரது நடிப்பு ரசிக்க வைக்கிறது. ரெடின் கிங்ஸ்லியின் காமெடி படத்திற்கு பெரிய பலம். அர்ச்சனா, தீபா சங்கர், யோகிபாபு ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்குப் பிறகு டாக்டர் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான கடத்தல் கதை போல் இல்லாமல், வித்தியாசமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். மெதுவாக நகரும் திரைக்கதை முதல்பாதியிலேயே அதிக விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது. ஆனால், பிற்பாதியில் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்து காணப்படுகிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
அனிருத்தின் இசை படத்திற்கு பெரிய பலம். இவரது பின்னணி இசை திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘டாக்டர்’ சிறப்பானவர்.