உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு…
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
உலக அஞ்சல் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1000 ரூபாய் பெறுமதியான முத்திரை மற்றும் இலங்கையின் உள்ளூர் பறவைகளை உள்ளடக்கும் வகையிலான முத்திரை தொகுப்பும் வெளியிடப்பட்டது.
வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்கள் அதற்கான முதல் நாள் உறை மற்றும் முத்திரையை பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் வழங்கினார்.
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட உலக அஞ்சல் தின நினைவு முத்திரை -2021, கொவிட் 19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும் நமது நாட்டு தபால் சேவை சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருகின்றமையை பிரதிபலிக்கும் வகையில் புலஸ்தி எதிரிவீர அவர்களினால் வடிகமைக்கப்பட்டுள்ளது.
1000 ரூபாய் பெறுமதியான நிரந்தர வகை முத்திரையானது யாபஹூவ சிங்கத்தை பிரதிபலிக்கும் வகையிலான கைகளினால் வரையப்பட்ட கிராஃபிக் ஓவியமாகும். இசுறு சதுரங்க அவர்களினால் இம்முத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை முத்திரைகளின் ஊடாக பிரதிபலிக்கப்படாத உள்ளூர் பறவைகளை சித்தரிக்கும் வகையிலான 6 முத்திரைகளும், ஆறு முதல் நாள் உறைகளும் இவ்வாறு இன்றைய தினம் வெளியிடப்பட்ட முத்திரைகளில் உள்ளடங்குகின்றன.
சாம்பல் இருவாய்ச்சி (‘அலு கேதென்னா’), ‘ஹீன் கொட்டோருவா’, ‘வன கொவுலஸ்பெடியா’, ‘புள்ளி வல் அவிச்சியா’, பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (‘மஹ ரது கெரலா’), மற்றும் ‘பட ரது வெஹிலிஹினியா’ ஆகிய உள்ளூர் பறவைகள் இம்முத்திரைகளில் சித்தரிக்கப்பட்டுள்ளன. புலஸ்தி எதிரிவீர அவர்களினால் இம்முத்திரை தொகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் ஜகத் P விஜேவீர, தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன, பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) ரஞ்சித் K ரணசிங்க, பிரதி தபால்மா அதிபர் மேல் மாகாணம்- தெற்கு W.K.A.சிசிர குமார, முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் சாந்த குமார மீகம, உள்நாட்டு வருவாய் ஆணையாளர் நாயகம் H.M.W.பண்டார உள்ளிட்ட முத்திரை பணியகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு