உளநல ஆரோக்கிய தினத்தில் கல்லடி பாலத்தின் வாவியை நீந்திக் கடந்த இளைஞன்!

உலக உளநல ஆரோக்கிய தினம் ஒக்டோபர் 10ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகிலுள்ள வாவியை இளைஞர் ஒருவர் நீந்திக் கடக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) இடம்பெற்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த 20 வயதுடைய அமலநாதன் சஞ்சீவன் எனும் இளைஞனோ இவ்வாறு கல்லடி பாலத்தின் மட்டக்களப்பு நகர் பக்கமாக இருந்து கல்லடி பக்கமாக நீந்திச் சென்று உடல் உள ஆரோக்கியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
மேற்படி இளைஞன் நீந்துவதற்கான நடவடிக்கைக்கு ஆரம்பத்தில் பொலிஸார் அனுமதி மறுத்ததுடன், பின்னர் பாதுகாப்பு உள்ளிட்ட முன்னாயத்தங்களை பரிசீலனை செய்தபின்னர் பொலிஸார் அனுமதியளித்துள்ளனர்.
தற்போதய கொவிட் தொற்று காலத்தில் அனைவரும் உள நலத்தையும் உடல் நலத்தையும் பேணவேண்டும் எனவும் இதுவரை கல்லடி பாலத்தில் சுமார் 30 பேர் குதித்து தற்கொலை செய்துள்ளதாகவும் இவ்வாறான தவறான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறக் கூடாது எனும் தகவலை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், இந்த சர்வதேச உள நல ஆரோக்கிய தினத்தில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவே இந்த நீச்சல் நடவடிக்கையினை தான் மேற்கொண்டதாக அமலநாதன் சஞ்சீவன் தெரிவித்துள்ளார்.