குத்தாலத்தில் 13 வயது சிறுமி மர்மசாவு நீடிக்கும் மர்மம் ! – போலீசார் வீடுவீடாக பலரிடம் துருவிதுருவி விசாரணை
குத்தாலம் அருகே வில்லியநல்லூர் கிராமத்தில் 13 வயது சிறுமி மர்மசாவு நீடிக்கும் மர்மம். தனிப்படை அமைக்கப்பட்டு கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூரைச் சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முந்தினம் இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் அவரது மாமா வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர் அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு பகுதியில் தேடிய சிறுமியின் உறவினர்கள் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சிறுமியை தேடி வந்த உறவினர்கள் மாமா வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி அணிந்திருந்த உடை கிழிந்து ரத்தக்கரை இருந்தது. மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு சிறுமி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கிய போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அமரர் ஊர்தியில் வந்த சிறுமியின் உடலை மறித்து நடவடிக்கை கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து குத்தாலம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வில்லியநல்லூர் கிராமத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உடலை வாய்க்காலில் இருந்து உறவினர்கள் வீட்டிற்கு தூக்கி வந்துவிட்டதால் வாய்காலில் தடயம் எதுவும் கிடைக்கவில்லை.
உறவினர்கள் அளித்த தகவலின் பேரிலேயே விசாரணை செய்துவரும் போலீசாருக்கு உறவினர்களிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. சிறுமி செல்போன் பயன்படுத்துவதில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் மட்டுமே போலீசார் விசாரணையை துரிதப்படுத்த முடியும் என்பதால் சிறுமியின் மர்மச்சாவு நீடித்து வருகிறது. போலீசார் வீடுவீடாக பலரிடம் துருவிதுருவி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.