100 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை நோக்கி இந்தியா!

இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியின் இலக்கு அடுத்த சில நாட்களில் 100 கோடியை எட்டவுள்ளது. தற்போதுவரை 94 கோடியே 76 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா மூன்றாவது அலை தொடர்பான அச்சம் காரணமாக பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. விரைவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மத்திய, மாநில அரசுகளின் முயற்சி காரணமாக தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா வேகமாக முன்னேரி வருகிறது. சர்வதேச அளவில் இல்லாத அளவாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளின்போது இந்தியாவில் 2 கோடியே 50 லட்சத்துக்கு அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் சீனாவில் ஒரே நாளில் 2.47 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதே உலக சாதனையாக இருந்தது. இதனை இந்தியா முந்தியது.

இதேபோல், 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்னும் இலக்கையும் இந்தியா விரைவில் அடையவுள்ளது. நாட்டில் தற்போது, 94.76 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2 முதல் 8ம் தேதி வரை நாளொன்றுக்கு சராசரியாக 59.8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசனை செய்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மாண்ட்வியா, தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்தும்படி 19 மாநில அரசுகளை கேட்டுகொண்டார்.

தற்போது தமிழகம் போன்ற மாநிலங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 100 கோடி தடுப்பூசி என்னும் இலக்கை எட்டுவதற்கு உதவுதற்காக அக்டோபர் 8 முதல் 14ம் தேதிவரை சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை மகாராஷ்டிர அரசு நடத்திவருகிறது. இதனால் அடுத்த ஒரிரு தினங்களில் 100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்னும் இலக்கை இந்தியா அடையவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.