ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை – ரூ.142 கோடி பறிமுதல்
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தது. இதில் 142 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.மேலும், ரூ.550 கோடி வருவாயை கணக்கில் காட்டாமல் அந்நிறுவனம் மறைத்தது தெரியவந்துள்ளது.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம் ( Hetero Pharma) ரெம்டெசிவிா், ஃபவிபிரவிா் போன்ற கொரோனா தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்ய பல்வேறு ஒப்பந்தங்களை போட்டுள்ளது. இந்தியாவில் கோவிட் -19 தடுப்பூசி ஸ்புட்னிக் வி தயாரிப்பதற்காக ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஹெட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமாக இந்தியா, சீனா, ரஷ்யா, எகிப்து, மெக்சிகோ மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் 25 க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹெட்ரோ பார்மாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 6 மாநிலங்களில் உள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
சோதனையில் ஹெட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு வங்கி லாக்கா்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 16 வங்கி லாக்கா்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. சோதனையின் போது 142.87 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக மத்திய நேரடி வரிவிதிப்பு ஆணையம் கூறியுள்ளது. இதேபோல், 550 கோடி ரூபாய் வருவாயை அந்நிறுவனம் கணக்கில் காட்டாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தனிநபரின் செலவினங்களை நிறுவனத்தின் செலவினங்களில் சோ்த்தது, அரசின் பதிவுக் கட்டணத்தைவிட குறைந்த கட்டணத்தில் நிலம் வாங்கியது போன்ற முறைகேடுகளில் அந்நிறுவனம் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள், பென் டிரைவ்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை சோதனையின்போது கைப்பற்றப்பட்டுள்ளன.