மந்தனா அரைசதம் வீண் மகளிர் டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா.
இந்திய மகளிர் அணியுடன் நடந்த 3வது டி20 போட்டியில், 14 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
கராரா ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. பெத் மூனி 61 ரன் (43 பந்து, 10 பவுண்டரி), கேப்டன் மெக் லான்னிங் 14 ரன் எடுக்க, ஹீலி 4, கார்ட்னர் 1, பெர்ரி 8 ரன்னில் வெளியேறினர். டாஹ்லியா மெக்ராத் 44 ரன் (31 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஜார்ஜியா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய பந்துவீச்சில் ராஜேஷ்வரி 2, ரேணுகா, வஸ்த்ராகர், தீப்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன் மட்டுமே சேர்த்து 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 52 ரன் (49 பந்து, 8 பவுண்டரி) விளாசினார். ஜெமிமா 23, ரிச்சா கோஷ் 23* ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆஸி. தரப்பில் நிகோலா கேரி 2, கார்ட்னர், ஜார்ஜியா, சதர்லேண்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆஸி. அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
அந்த அணியின் டாஹ்லியா மெக்ராத் ஆட்டம் மற்றும் தொடரின் சிறந்த வீராங்கனை விருதுகளை தட்டிச் சென்றார்.