கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு காணி தொடர்பான விசேட பயிற்சிப்பட்டறை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கடமையாற்றும் கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான இரு நாள் விசேட பயிற்சிப்பட்டறை மாவட்ட அரசாங்க அதிபர கே. கருணாகரன் தலைமையில் இன்று (11) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக காணிகளை நிர்வாகம் செய்தல் தொடர்பான விசேட பயிற்சி செயலமர்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் 258 கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 3 கட்டங்களாக இடம்பெறவுள்ளன.
இத்திட்டத்தின் முதல்கட்டமாக 14 பிரதேச செயலகப் பிரிவுகளையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு, காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தனின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமானது.
இப்பயிற்சி நெறிக்கான வளவாளர்களாக கிழக்கு மாகாண காணி உதவி ஆணையாளர் ஜீ. ரவிராஜன், கிழக்கு மாகாண உதவி பிரதம செயலாளர் ஜீ. பிரணவன், சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான மாவட்ட இணைப்பாளர் கே. குகதாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் பிரதிநிதி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.டீ. விமல்சி, மாவட்ட செயலக காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள், வளவாளர்கள், கிராமசேவை உத்தியோகத்தர்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.