நான்கு இடங்களில் விபத்து! – நால்வர் பரிதாபச் சாவு.

நான்கு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் நால்வர் மரணமடைந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதபான்கொட பிரதேசத்தில், ஓட்டோ ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஓட்டோவைச் செலுத்தி வந்த மஸ்கெலியா பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய நபர் மரணமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
போகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிதமடல வேல்யாய பிரதேசத்துக்கு அருகில் வடிகாண் ஒன்றில் மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். விபத்தில் முகலன்யாய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய நபரே மரணமடைந்துள்ளார்.
பதுருளிய – மினிகன்டல வீதி, கலகங்கொட பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் மற்றுமொரு லொறிக்கு இடம்கொடுத்து செல்ல முற்பட்டபோது வீதியில் சென்ற நபர் மீது மோதியுள்ளது. இவ்விபத்தில் பதுருளிய பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயது நபர் படுகாயமடைந்த நிலையில், பதுருளிய வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது மரணமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இதேவேளை, குருநாகல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யன்தம்பலாவ வாவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரத் தூணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மல்கடுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது நபரே மரணமடைந்துள்ளார்.