தோல்வியை ஏற்ற கோட்டா உடன் பதவி விலக வேண்டும்! சுமந்திரன் வலியுறுத்து.
“தனது அரசின் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உடனடியாகப் பதவி விலக வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனைஇன்று சந்தித்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசை நடத்தத் தெரியவில்லை என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தானாகவே இராணுவத்தின் ஆண்டு விழா மேடையில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார்.
நாங்கள் தோற்றுவிட்டோம் என்பதை ஒத்துக்கொள்கின்றோம் என்று அவர் கூறியுள்ளார்.
அப்படித் தோல்வியை ஒத்துக்கொள்பவர் பதவியை உடனடியாக இராஜிநாமா செய்து விட்டுச் செல்ல வேண்டும்.
ஜனாதிபதி இரண்டு விடயங்களைச் சொன்னார். தேர்தலை நடத்துவேன், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று அவர் கூறினார். ஆனால், நாட்டில் உயர்ந்து செல்லும் விலைவாசிகளைக் கட்டுப்படுத்துவேன் என்று அவர் குறிப்பிடவில்லை. அதேபோன்று விவசாயிகளின் உரம் சம்பந்தமாகவும் அவர் எதுவுமே சொல்லவில்லை.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை குறித்துப் பேசாமல். அரசமைப்பை மாற்றுவேன் என்றும், தோல்வியை ஒப்புக்கொள்கின்றேன் என்றும் அவர் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்” – என்றார்.