9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இதற்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. தேர்தல் அறிவிக்கப்பட்ட 27,003 பதவியிடங்களில் நீதிமன்ற வழக்கின் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம், கொளத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 27,002 பதவியிடங்களுக்கு 98,151 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 1,166 வேட்புமனுக்கள் உரிய பரிசீலனைக்கு பின் நிராகரிக்கப்பட்டன. 14,571 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் திரும்பப்பெற்று கொண்டனர். 2,981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக, 23,998 பதவியிடங்களுக்கு 79,433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.
4 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் இருகட்டங்களையும் சேர்த்து மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் 74 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
உள்ளாட்சித் தேர்தலில் பதிவாக வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை எட்டு மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒருசில நேரங்களிலேயே முன்னணி நிலவரம் தெரிய வந்துவிடும். ஒவ்வொரு மையத்திலும் 4 பதவிகளுக்கான வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.