பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! ஐ.தே.க. எச்சரிக்கை.

நாட்டில் பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
தற்போதைய அரசு எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
காலி – ஹக்மீமன பகுதியில் ஏற்று நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“காலி மாவட்டத்தில் தேயிலை தொழிற்துறைகளில் ஈடுபடுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். உரத் தட்டுப்பாடு காரணமாக தேயிலை செய்கை வழமைக்குத் திரும்ப இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும்.
உலகில் தரமான உரத்தை 350 ரூபாவுக்கு வழங்க முடியாது. அரசு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது. தரம் குறைந்த உர வகைகளைப் பயன்படுத்துவதனால் மண் வளம் இழக்கும்.
அத்துடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும்” – என்றார்.