9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் திமுக பிரமாண்ட வெற்றி அதிமுக படு தோல்வி!
பொதுவாக உள்ளாட்சித் தேர்தலில் எது ஆளும் கட்சியோ அக்கட்சியே வெற்றி பெறும் என்பது வழக்கமான விஷயம்தான். ஆனால், தோல்வியடையும் கட்சிகள் மிக மிக மோசமாக தோற்பதில்லை. தமிழகத்தின் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளுமே படு தோல்வியடைந்துள்ளன.
99% இடங்களை திமுக வென்றுள்ள நிலையில் ஒற்றை இலக்கத்தில்தான் அதிமுக வென்றுள்ளது அக்கட்சியனரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.
9 மாவட்டங்களிலும் 1380 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கும், 140 மாவட்டக் கவுன்சிலர் பதவிகளுக்குமான தேர்தல் இது. இதில் இதில் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தலில் 1380 இடங்களில் இதுவரை 222 இடங்களில் முடிவுகள் தெரிந்துள்ளன இதில் 192 இடங்களில் திமுக வென்றுள்ளது. 17 இடங்களில் அதிமுகவும், 13 இடங்களில் சுயேட்சைகளும் வென்றுள்ளார்கள்.
அதே போன்று மாவட்டக் கவுன்சிலர் 140 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 120 இடங்களில் திமுகவும், 4 இடங்களில் அதிமுகவும், 1 இடத்தில் சுயேட்சை ஒருவரும் வென்றுள்ளார்கள்.
இந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் மட்டும் எந்த இடங்களையும் ஒதுக்க மாட்டோம் என்றது அதிமுக. அதனால் பாஜக அங்கு தனித்துப் போட்டியிட்டது. கள்ளக்குறிச்சி அதிமுகவின் கோட்டை அதனால் அதை வேறு கட்சிகளுக்கு ஒதுக்க மாட்டோம் என்றது அதிமுக.
கள்ளக்குறிச்சியில் 180 ஒன்றியக் கவுன்சிலர்கள் பதவி அதில் 21 இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது அதிமுக 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மாவட்டக் கவுன்சிலர் பதவி 19 இதில் 19 இடங்களிலும் திமுக முன்னிலை பெற்றுள்ளது ஒரு இடத்திலும் கூட அதிமுக வெல்ல வில்லை.