விசேட சுற்றிவளைப்புகளில் 8 பேர் வசமாக சிக்கினார்கள்.
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கமைய பானம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெடஓய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புகளில் அனுமதிப்பத்திரமின்றி டிரக்டர்களில் மணல் ஏற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இரண்டு டிரக்டர்களும், ஜே.சி.பி. இயந்திரம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொத்துவில், திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 33, 34 மற்றும் 52 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகரை மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், காடழிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைதுசெய்யப்பட்டு வாகரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வாகரை பிரதேசத்தை சேர்ந்த 35, 48, 55 மற்றும் 67 வயதுகளையுடைய நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டிருந்தது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 33.75 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் 178 லீற்றர் கோடா, ஒரு எரிவாயு அடுப்பு என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.