விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை!
கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பரவலை குறைந்து வருவதை தொடர்ந்து நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1-8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனிடையே, பண்டிகை காலம் தொடங்கியுள்ளதால், வியாபாரிகள்,பொது மக்களின் தேவையை கருத்தில் கொண்டு கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்குவதா அல்லது இதே நிலையை தொடர்வதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில் சுகாதாரம், வருவாய், பள்ளிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். பள்ளிகள் திறக்கப்படுவதால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.
விஜயதசமிக்கு கோவில் திறப்பா?
தமிழகத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களுக்கு கோவில்களை திறப்பதற்கு தடை அமலில் உள்ளது. இந்நிலையில், விஜயதசமி தினமான வரும் வெள்ளிகிழமை (அக்டோபர் 15) கோவில்களை திறக்க உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், கோவில் திறப்பு குறித்து அரசே முடிவெடுக்கட்டும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். எனவே, இன்றைய கூட்டத்தில் கோவில்கள் திறப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.