நிலக்கரித் தட்டுப்பாட்டின் காரணமாக நாடு முழுவதும் 115 அனல்மின் நிலையங்கள் முடங்கும் அபாயம்!
இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாடு தொடர்பாக துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே தட்டுப்பாடு காரணமாக, 115 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
நிலக்கரி இருப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய மின்சார ஆணையம், நாட்டிலுள்ள மொத்த 135 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 115-ல் கடுமையான நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதில் 17 நிலையங்களில் ஒரு நாளைக்கு கூட போதுமான இருப்பு இல்லை என்றும் 26 நிலையங்களில் ஒரு நாள் உற்பத்திக்கு மட்டுமே இருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 22 நிலையங்களில் 2 நாட்களுக்கும், 18-ல் மூன்று நாள்களுக்கும் மட்டுமே நிலக்கரி இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் உள்ள 33 நிலையங்களில் 9-ல் நிலக்கரி இருப்பு எதுவும் இல்லை என கூறப்படுள்ளது. மொத்தத்தில் சராசரியாக நாட்டிலுள்ள அனைத்து மின் நிலையங்களிலும் 4 நாள்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நிலக்கரி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் ஆகியோருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, நிலக்கரி இருப்பு குறித்தும், மின் வெட்டு குறித்தும் Power point மூலம் பிரதமர் மோடிக்கு விளக்கப்பட்டது. நிலக்கரி தட்டுப்பாட்டை போக்க சுழற்சி முறையில் மாநிலங்களுக்கு நிலக்கரி வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே அனல் மின் நிலையங்களின் ஒதுக்கப்படாத மின்சாரத்தை, நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. உபரி மின்சாரம் வைத்துள்ள மாநிலங்கள் அதனை பிற மாநிலங்களுக்கு வழங்கும் வகையில், மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. உபரி மின்சாரத்தை வியாபார நோக்கில் விற்பனை செய்தாலோ, ஒதுக்கப்படாத மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருந்தாலோ, மத்திய அரசு அதனை மின்சார தேவையுள்ள பிற மாநிலங்களுக்கு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், 15 சதவிகிதம் ஒதுக்கப்படாத மின்சாரமாக வைக்கப்படுவது வழக்கம்.
டெல்லியில், மின்சார விநியோகம் தடைப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலத்திற்கு பெருமளவிலான மின்சாரத்தை அளிக்கும் படி தேசிய அனல் மின் உற்பத்தி கழகத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி மட்டுமல்லாமல் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களிலும் வரலாறு காணாத அளவிற்கு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.