கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக ஜெர்மனி தகுதி.
32 அணிகள் இடையிலான 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2022) நவம்பர், டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதையொட்டி கண்டங்களுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.
இதில் ஐரோப்பிய கண்டத்துக்கு மொத்தம் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் மொத்தம் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இவற்றில் இருந்து 13 அணிகள் உலக போட்டிக்கு தகுதி பெறும். இதில் ‘ஜெ’ பிரிவில் 6 அணிகளில் ஒன்றாக அங்கம் வகிக்கும் ஜெர்மனி அணி நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் உள்ளூர் அணியான வடக்கு மாசிடோனியாவை துவம்சம் செய்து முந்தைய தோல்விக்கு பழிதீர்த்தது. ஜெர்மனி அணியில் லுகாஸ் ஹவர்ட்ஸ், டிமோ வெர்னர் (2 கோல்), ஜமால் முசிலா ஆகியோர் கோல் அடித்தனர். மற்ற ஆட்டங்களில் ருமேனியா 1-0 என்ற கோல் கணக்கில் அர்மேனியாவையும், ஐஸ்லாந்து 4-0 என்ற கோல் கணக்கில் லீச்டென்ஸ்டீனையும் தோற்கடித்தது.
முன்னாள் சாம்பியனான ஜெர்மனி அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 21 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. இன்னும் 2 ஆட்டம் எஞ்சியிருந்தாலும் ஜெர்மனியின் முதலிடத்துக்கு ஆபத்து இல்லை. அதனால் ஜெர்மனி, முதல் அணியாக 2022-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஒட்டுமொத்தத்தில் அந்த அணி உலக கோப்பையில் பங்கேற்க இருப்பது இது 20-வது முறையாகும்.