அர்ஜூன மகேந்திரன் மோசடி விசாரணையை தொடரவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற முறிகள் மோசடி தொடர்பான வழக்கு விசாரணையை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் மற்றும் பத்தாவது பிரதிவாதியான அஜான் கார்டியா புஞ்சிஹேவா ஆகியோர் இன்றி தொடரவுள்ளதாக மேல் மாகாண முதலாவது நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.
மத்திய வங்கி முறிகள் ஏலத்தின் போது பொதுச்சொத்தான 688 மில்லியன் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி, நம்பிக்கையை சீர்குலைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது சிங்கப்பூரில் வசித்து வரும் வழக்கின் முதலாவது பிரதிவாதியான அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக இலங்கை அரசாங்கம், இராஜதந்திர ரீதியில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லையென சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான மன்றிற்கு அறிவித்தார்.
இது தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நகர்த்தல் பத்திரத்தினூடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழக்கின் எட்டாவது பிரதிவாதியான பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்ட ரஞ்சித் ஹுலுகல்லே சிகிச்சைகளுக்காக அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்குமாறு, அவரின் சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொடவத்த ஆகியோர் அங்கம் வகித்த நீதிபதிகள் குழாம் இன்று நிராகரித்துள்ளது.