நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும்! – சாகர காரியவசம் எம்.பி. கருத்து.
“வயிற்றைப் பற்றி சிந்திக்கும்போது நாட்டைப் பற்றியும் சிந்திக்க வேண்டும், இல்லையேல் எதிர்காலத்தில் எமது சந்ததியினர் எங்கள் மீது, நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை என்று சாபமிட நேரிடும்.”
இவ்வாறு அரசின் பிரதான கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொருட்களின் விலையேற்றம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துக் கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டு மக்கள் சுதந்திரம் கிடைத்தது முதல் 70 ஆண்டுகளாக தங்களின் வயிற்றை நிரப்பிக் கொள்வது தொடர்பாக சிந்தித்தனரே தவிர, நாட்டைப் பற்றி சிந்திக்கவில்லை.
உலகளாவிய ரீதியில் நிலவும் கொரோனாத் தொற்றுப் பரவல் நிலைமையால், நாட்டில் பொருட்கள் சேவைகளின் விலைகள் உயர்வடையும் நிலை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் இவ்வாறு விலை அதிகரிப்பதைத் தவிர வேறு வழிகள் கிடையாது.
உலக அளவில் பொருட்களின் விலைகள் உயர்வடையும்போது இந்த நாட்டில் மாத்திரம் சட்டங்களைப் போட்டு அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது” – என்றார்.