நீட் தேர்வுக்கு எதிராக தெலங்கானா முதல்வர் ஆதரவைக் கோரி மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம்!
தமிழ்நாட்டில் 2017-ம் ஆண்டு மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்பட்டதிலிருந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதனை கடுமையாக எதிர்த்துவருகிறார். அதன்தொடர்சியாக அவர் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற பிறகு நீட் தேர்வின் பாதிப்பு குறித்து அறிவதற்கு முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். அதனையடுத்து, தமிழ்நாடு சட்டசபையில் மருத்துவப் படிப்பில் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுவதற்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக நீட் பாதிப்புகள் குறித்து மேற்குவங்காளம், ஒடிசா, ஆந்திரா, சத்தீஸ்கர், டெல்லி, கோவா, பஞ்சாப், கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, ஜார்கண்ட் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்குக் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதங்களையும் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைகளையும் முதலமைச்சர்களை நேரில் சந்தித்து தி.மு.க எம்.பிக்கள் வழங்கிவருகின்றனர். அதன்தொடர்ச்சியாக, தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ்வுக்கு எழுதிய கடிதத்தை தி.மு.க எம்.பிக்கள் இளங்கோவன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டவர்கள் தெலங்கானா மாநில தொழிற்துறை அமைச்சரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் செயல்தலைவருமான கே.டி.ராமா ராவைச் சந்தித்து வழங்கினர்.
இதுகுறித்து தெரிவித்த இளங்கோவன், ‘நீட் தேர்வை சந்திரசேகர ராவ் எதிர்க்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாங்கள் கடிதத்தை வழங்கியுள்ளோம். நீட் தேர்வு நடத்தும்போது மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக சந்திரசேகர ராவ் உறுதியளித்துள்ளார். இந்த விவகாரத்தில் சந்திரசேகர ராவ் ஆதரவைப் பெறுவோம்’ என்று தெரிவித்தார்.