கல்லடிக் கரைவலையில் மீனவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுவிற்குட்பட்ட கல்லடி திருச்செந்தூர் பகுதியில் மீனவர்கள் கரைவலையைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வலை கரைக்கு வந்ததும் மீன்களுடன் துப்பாக்கியொன்றும் கடலிலிருந்து அகப்பட்டிருப்பதை அவதானித்த மீனவர்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கியானது கல்லடி திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு பின் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் கரை வலையிலேயே அகப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட துப்பாக்கி T56 றக துப்பாக்கியென இனங்கண்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு குறித்த துப்பாக்கியினை எடுத்துச் சென்றுள்ளனர்.
குறித்த துப்பாக்கி தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், குற்றச்செயல்களுடன் ஈடுபட்ட எவரேனும் கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.