வடக்கில் வாள்வெட்டுக்கு முடிவு கட்டியே தீருவேன்! – புதிய ஆளுநர் ஜீவன் உறுதி.
“வடக்கில் தலைவிரித்தாடும் வாள்வெட்டு மற்றும் கத்திவெட்டுச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன்.”
இவ்வாறு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
பதவிப் பிரமாணத்தின் பின்னர் முதன்முறையாக அவர் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய காணொளி நேர்காணலிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எனது பதவிக்காலத்தில் வடக்கு மாகாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு – கத்திவெட்டுச் சம்பவங்களுக்கு ஒருபோதும் இடமில்லை. ஆட்களின் கை, கால் வெட்டுவதற்கு இடமில்லை.
இந்த அடாவடிகளில் யாராவது ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பேன். வடக்கு மாகாணம் அனைவருக்கும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வேன்
இதேவேளை, வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவேன்.
பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை இனங்கண்டு அதற்கான தீர்வை வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்துவேன். இதற்குத் தீர்வு காண இலங்கை மீன்பிடி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் நான் பேசுவது மட்டுமன்றி அவர்களூடாக இந்திய மத்திய அரசுடனும் பேசுவேன்” – என்றார்.