நவம்பர் 15-ம் தேதி முதல் ஊழியர்களை அலுவலகம் வந்து பணி செய்ய அழைப்புவிடுத்துள்ள டி.சி.எஸ் நிறுவனம்
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாத பாதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்தொடர்ச்சியாக அலுவலக பணியைக் கொண்டுள்ள நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்வதற்கு பணித்தது. வீட்டிலிருந்து பணி செய்யும் முறையை அதிக அளவுக்கு பயன்படுத்தியது தகவல் தொழில்நுட்பத்துறைதான்.
இன்போஸிஸ், டி.சி.எஸ், ஹெ.சி.எல் உள்ளிட்ட அனைத்து ஐ.டி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணி செய்ய பணித்தது. அப்போது தொடங்கிய வீட்டிலிருந்து பணி செய்யும் முறை தற்போதுவரை நீண்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில் நிறுவனங்கள் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்துக்கு வந்து பணி செய்ய அழைப்புவிடுத்துவருகின்றன.
அதில், ஒன்றாக டி.சி.எஸ் நிறுவனம் நவம்பர் 15-ம் தேதி முதல் ஊழியர்களை தாங்கள் இதுவரையில் பணி செய்த அலுவலகத்துக்கு வந்த பணி செய்யவேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 5 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 5 லட்சம் பணியாளர்களில் தற்போது வெறும் 5 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் சென்று பணி செய்துவருகின்றனர். இந்த ஆண்டின் இறுதிக்குள் அனைத்து ஊழியர்களையும் அலுவலகம் வந்து பணி செய்வதற்கு அலுவகம் ஊக்குவிக்கிறது. ஊழியர்களின் உடல்நலமும் பாதுகாப்பும் முக்கியம் என்று டி.சி.எஸ் தெரிவித்துள்ளது.