பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 24 வாரங்களாக அதிகரித்து புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு
இந்தியாவில் பெண்கள் சாதாரணமாக 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ள ஒரு மருத்துவரின் பரிந்துரையும், 12 முதல் 20 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய இரு மருத்துவர்களின் பரிந்துரையும் தேவை என விதிகள் அமலில் உள்ளன. பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான காலவரம்பு தொடர்பான சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
அந்த புதிய சட்டத்தின்படி, குறிப்பிட்ட ஏழு காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்வதற்கான கால அவகாசம் 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த ஏழு காரணங்கள்:
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோர் அல்லது முறைதவறிய உறவால் பாதிக்கப்பட்டோர் அல்லது கர்ப்பம் தரித்த சிறார்
கர்ப்பிணியாக இருக்கும்போது ஒரு பெண்ணின் கணவர் மாறும் சூழல் வரும்போது(கணவன் இறந்தாலோ, விவகாரத்து ஆனாலோ)
மாற்றுத்திறனாளி பெண்கள்
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்
கரு வளர்ச்சியில் குறைபாடு இருக்கும்போது தாயின் உயிருக்கு ஆபத்து என்ற சூழலில் கலைக்கலாம்
கருவிலுள்ள குழந்தை தீவிரமான உடல்பாதிப்பு அல்லது மனநல பாதிப்புக்கு ஆளாகும் சூழல் இருந்தால் கலைக்கலாம்.
கர்ப்பிணிப் பெண் எதிர்பாராதவிதமாக ஒரு ஆபத்தை எதிர்கொள்ளும்போது அல்லது அவசரகால சூழலில் கருவைக் கலைக்கலாம்.