காட்டு யானையின் அட்டகாசம்.

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன் சொத்துக்களும் பெருமளவில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (15) அதிகாலை இரண்டு மணியளவில் கல்முனை மாநகர சாய்ந்தமருது 03ம் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு சென்ற யானை அங்கிருந்த பயிர்நிலங்களை முற்றாக சேதமாக்கியுள்ளதுடன், பயிர்கள், மரங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அருகில் குடியிருந்த பலரும் உயிரச்சுறுத்தலுக்கு இலக்காகி உள்ளனர்.

நேற்றிரவு சாய்ந்தமருதில் புகுந்து சுற்றுமதில்களை அடித்து நொறுக்கியிருக்கும் யானை பயிர் நிலங்களுக்கு அண்மையில் உள்ள அரிசி ஆலையொன்றினுள் புகுந்து அங்கிருந்த சேமிப்பறையை உடைத்து நெல் மூட்டைகளையும் சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது. இதனால் பாரியளவு பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பல அரச அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களும் சமீபத்தைய நாட்களில் இப்படியான யானைத் தாக்குதலுக்கு இலக்காகி வருவதுடன் வன இலாகா அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை என்ற பரவலான குற்றசாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவை தலையிட்டு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.