ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது! சரத் வீரசேகர எச்சரிக்கை.

“பாடசாலைகளுக்கு வருகை தர விரும்பும் ஆசிரியர்களை எவராவது தடுத்து நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”
– இவ்வாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டமைப்பினருக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பயங்கரவாதம் உருவாவதற்கு வழிவகுத்த காரணி சரியாக இருக்கலாம். அவ்வாறு இல்லாவிட்டால் தவறாக இருக்கலாம். எனினும், அந்தவொரு காரணத்துக்காகவும் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. ஏனெனில் அதன்மூலம் மக்களே பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் ஆசிரியர்களின் பிரச்சினை நியாயமானதாக இருக்கலாம். அதற்காக தொழிற்சங்க நடவடிக்கையை அனுமதிக்க முடியாது. இதனால் மாணவர்களே பாதிக்கப்படுகின்றனர். எனவே, பாடசாலைகளுக்குச் சமூகமளித்து, கல்வி நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கின்றேன்.
அவ்வாறு வரவிரும்பும் ஆசிரியர்களுக்கு எவராவது அச்சுறுத்தல் விடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றார்.