மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டன…
தற்போது நடைமுறையில் இருக்கும் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை, இம்மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை வரை கடுமையாகக் கடைபிடிக்கத் தீர்மானிக்கப்பட்டது.
இம்மாதம் 19 மற்றும் 20ஆம் திகதிகள் விடுமுறை தினங்களாக அமையப்பெற்று நீண்ட விடுமுறையுடன் கூடிய வார இறுதி அமையப்பெறவுள்ளமையால், அனைத்து மாகாண எல்லைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், பாதுகாப்புத் துறையினருக்குப் பணிப்புரை விடுத்தார்.
இன்று (15) முற்பகல், வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போதே, ஜனாதிபதி அவர்கள் மேற்கண்ட பணிப்புரையை விடுத்தார்.
கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களான 18 – 19 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கைகள், இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.
அத்துடன், ஏனைய மாவட்டங்களிலுள்ள மேற்படி வயதுப் பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பிள்ளைகளுக்கும், இம்மாதம் 21ஆம் திகதி முதல், பாடசாலைகள் மற்றும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் ஊடாகத் தடுப்பூசி ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினரின் பரிந்துரைகளுக்கு அமைவாக, பாடசாலை மாணவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்படவுள்ளன.
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர், சுகாதாரப் பரிந்துரைகளுக்கமைய, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கான மூன்றாவது டோஸ் (Booster) தடுப்பூச்சியைச் செலுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமையன்று, மேலும் 6 இலட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன என்றும் கோரப்பட்டிருந்த தடுப்பூசிகள் தொடர்ந்த கிடைத்துக்கொண்டு இருக்கின்றன என்றும், கொவிட் தடுப்புச் செயலணியின் உறுப்பினரும் விசேட வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை மேலும் குறைத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்றும் தொற்றுக்கு இலக்காகும் நோயாளிகள் தற்போது கண்டறியப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி, அவ்விடங்களைத் தனிமைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார்.
கொவிட் ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் பின்பற்றிய வீட்டுத் தனிமைப்படுத்தல் வேலைத்திட்டமானது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விசேட பாராட்டைப் பெற்றுள்ளது என, விசேட வைத்திய நிபுணர் அநுருத்த பாதெனிய அவர்கள், கொவிட் ஒழிப்புச் செயலணிக் கூட்டத்தின் போது அறிவித்தார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
15.10.2021