உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் இலக்கு – பிரதமர் நரேந்திர மோடி!
உலகின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக இந்தியாவை உருவாக்குவதே அரசின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 7 புதிய நிறுவனங்களாக பிரித்து, பிரதமர் மோடி அவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். டெல்லியில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வளாகத்தில் இந்த விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி கனரக வாகன தொழிற்சாலையிலிருந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அம்பத்தூர் துணை ஆணையர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 7 நிறுவனங்களின் உருவாக்கம், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின், வலிமையான இந்தியா என்ற கனவை நனவாக்கும் என குறிப்பிட்டார்.
பாதுகாப்பு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து எதிர்கால தொழில்நுட்பத்தில் முன்னிலை பெற வேண்டும் என மோடி அறிவுறுத்தினார். கடந்த 5 ஆண்டுகளில் ராணுவ தளவாடங்களின் ஏற்றுமதி, 325 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். புதிய நிறுவனங்களுக்காக ஏற்கனவே 65 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும், உலகளாவிய தர அடையாளம் எனும் அளவிற்கு ராணுவ தளவாடங்களை இந்நிறுவனங்கள் வழங்கும் எனவும் மோடி உறுதியளித்தார்.
முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாதுகாப்புத்துறையில் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நவீன தொழில்நுட்பம் நிலவுவதாக மோடி கூறினார். இதற்கு தமிழ் நாடு மற்றும் உத்திர பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பு தாழ்வாரங்களே சிறந்த உதாரணம் என மோடி சுட்டிக்காட்டினார்.
சென்னை ஆவடியில் உள்ள ஆர்மர்டு வெஹிகில்ஸ் நிகாம், முனிடன்ஸ் இந்தியா, அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் அண்ட் எக்யூப்மென்ட் இந்தியா, ட்ருப் கம்பார்ட்ஸ், யந்திரா இந்தியா, இந்தியா ஆப்டெல், கிலைடர்ஸ் இந்தியா ஆகிய 7 நிறுவனங்கள் நூறு சதவிதித அரசு நிறுவனங்களாக மாற்றப்பட உள்ளன.