ஜெயிலுக்கு சென்ற சசிகலாவுக்கு மிஞ்சிய ஏமாற்றம்..
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வியை சந்தித்து துவண்டு கிடக்கும் அதிமுக தலைமைக்கு மேலும் ஒரு தலைவலியாக அமைந்துள்ளன சசிகலாவின் நடவடிக்கைகள். சிறைவாசத்திற்கு பின்னர் அவர் என்ன செய்தார்?
ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் கட்சியை டிடிவி தினகரனிடம் ஒப்படைத்து விட்டு சிறை சென்ற சசிகலாவுக்கு, விடுதலையாகி திரும்பி வந்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. அவர் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த வேளையில், 2017- ஆம் ஆண்டு செப்டம்பர் 12- ஆம் தேதி அதிமுகவின் தற்காலிக பொது செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நடவடிக்கை குறித்து தொடர்ந்து மவுனம் காத்து வந்த சசிகலா கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார். அப்போது அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர், வழிநெடுகிலும் திரண்ட தொண்டர்களால் 3 மணி நேர பயணம் 23 மணி நேரமாக மாறியது.
அப்போது அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்ததும் சர்ச்சையானது. சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தது அமமுக தொண்டர்கள் மட்டுமே என அதிமுக மேலிடம் அவசர அவசரமாக விளக்கம் அளித்தது. சிறையில் இருந்து விடுதலை ஆனவுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு செல்ல சசிகலா திட்டமிட்டார். ஆனால் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி எடப்பாடி பழனிசாமி அரசு நினைவிடத்தை மூடி வைத்தது. சட்டப்பேரவை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என பலமுறை அறிக்கை வாயிலாக வலியுறுத்தினார் சசிகலா. சசிகலாவின் வலியுறுத்தல்களை பொருட்படுத்தாமல் மவுனம் காத்த எடப்பாடி பழனிசாமி, அவரை ஒருபோதும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என பகிரங்கமாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார். சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைய, மீண்டும் செய்திகளில் இடம் பிடித்தார் சசிகலா. இம்முறை ஆடியோ பதிவுகளோடு. அதாவது அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்சியை நிச்சயம் காப்பாற்றுவேன் என்று கூறினார்.
சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக நிர்வாகிகள் ஒவ்வெருவராக கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். சில காலம் நிர்வாகிகளுடன் பேசிய அவர், பின்னர் அதனையும் நிறுத்திக் கொண்டார். தமிழ் நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் சசிகலா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை சசிகலா சுற்றுப்பயணம் செல்லவில்லை.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மரணம் அடைந்ததையடுத்து சசிகலா நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அவர் அதிமுக கொடி கட்டிய காரிலேயே பயணம் செய்தார். அதன் பிறகு அமைதியாக இருந்த சசிகலா, அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். அவரை வரவேற்பதற்கு அவரது ஆதரவாளர்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் திரள்கிறார்கள்.
17-ந்தேதி ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டம் மற்றும் தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கு செல்லும் சசிகலா, எம்.ஜி.ஆர். படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் அவர் அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைக்கிறார். அ.தி.மு.க. கொடியை காரில் மட்டுமே பயன்படுத்தி வந்த சசிகலா அதனை ஏற்றி வைக்க திட்டமிட்டு இருப்பது அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.