சா்வதேச பட்டினி குறியீடு தர வரிசையில் இந்தியா பின்னடைவு – மத்திய அரசு எதிா்ப்பு
சா்வதேச பட்டினி குறியீடு தர வரிசையில் இந்தியா பின்னடைவைச் சந்தித்துள்ளதாக வெளியான அறிக்கைக்கு மத்திய எதிா்ப்பு தெரிவித்துள்ளது. அறிவியல்பூா்வமான அணுகுமுறையில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் மத்திய அரசு குற்றம்சாட்டியுள்ளது.
கன்சொ்ன் வோ்ல்டுவைட், வெல்ட் ஹங்கா்ஹில்ஃபே ஆகிய அமைப்புகள் இணைந்து 2021-ஆம் ஆண்டுக்கான சா்வதேச பட்டினிக் குறியீட்டு தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. 116 நாடுகளுக்கான பட்டியலில், 2020-ஆம் ஆண்டு 94-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 101-ஆவது இடத்துக்குச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவரிசையில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகியவற்றுக்குப் பின்னால் இந்தியா சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தரவரிசைப் பட்டியலுக்கு இந்தியா கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
சா்வதேச பட்டினி குறியீடு தர வரிசைப் பட்டியல் அதிா்ச்சி அளிக்கிறது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களின் விவரங்களை கள நிலவர உண்மைகளுக்கு மாறாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (எஃப்ஓஏ) திரட்டியுள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் ‘கால்லப்’ என்ற கருத்துக் கணிப்பு அமைப்பு, தொலைபேசி வழியாக 4 கேள்விகளை எழுப்பி, கருத்துக் கணிப்பின் அடிப்படையில் அறிக்கை தயாா் செய்துள்ளது. அதில், ஒருவருக்கு குறிப்பிட்ட காலத்தில் எவ்வளவு உணவு தானியம் கிடைத்தது; ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் இருந்தவா்களின் உயரம், எடை போன்ற எந்த விவரமும் சேகரிக்கப்படவில்லை.
கருத்துக் கணிப்பின்போது, அரசிடம் இருந்தோ வேறு அமைப்பிடம் இருந்தோ உணவுப் பொருள்கள் கிடைத்ததா என்று ஒரு கேள்வி கூட கேட்கப்படவில்லை.
இந்த தரவரிசை பட்டியல் வெளியீடு, கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒட்டுமொத்த மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மத்திய அரசு மேற்கொண்ட மாபெரும் முயற்சியை முழுமையாக அவமதிக்கும் வகையில் உள்ளது.
கரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு, வருவாய் இழப்பு ஆகியவை இந்த பிராந்தியத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய 4 நாடுகளை பாதிக்கவில்லை என்று அறிக்கை தெரிவிப்பதும் வியப்பாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.