கேரளாவில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/10/heavy-rains-continue-in-kerala-flood-warning-issued-for-5-districtsTNIE.jpg)
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அணைகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு நிற வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருவனந்தபுரம், வயநாடு, கொல்லம், பாலக்காடு, ஆழப்புழா, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.