ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தடியடி திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் காயம்!
![](https://cdn.ceylonmirror.net/tamil/wp-content/uploads/2021/10/Dusherra.jpg)
ஆந்திரப்பிரதேச மாநிலம், கர்னூல் மாவட்டத்தின் தேவர்கட் மலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற மல்லேஸ்வர சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கல்யாண உற்சவ விழா நடைபெறுகிறது.
கல்யாண உற்சவம் முடிவடைந்த பின்னர், உற்சவ மூர்த்திகளை கைப்பற்றுவதற்காக அந்தப் பகுதியைச் சேர்ந்த 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, நள்ளிரவில் தங்களுக்குள் தடியடி நடத்தி மோதிக் கொள்வது வழக்கம். இதில் வெற்றிபெறும் குழுவைச் சேர்ந்தவர்கள் உற்சவ மூர்த்தியை எடுத்துச் செல்வார்கள்.
இந்த நிலையில், மல்லீஸ்வரர் கோயிலில் கல்யாண உற்சவத்தைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமை இரவு தடியடி திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள், இரண்டு குழுக்களாகப் பிரிந்து கைகளில் தீவட்டி, தடி ஆகியவற்றை ஏந்தியபடி ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கிக் கொண்டனர்.
இதில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அதோனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் இந்த தடியடி உற்சவத்தை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எனினும், ஊர் மக்கள் ஏற்க மறுத்து உற்சவத்தை நடத்திவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.