17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கிய இரு பெரும் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள்!
17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு வழக்கில் இரண்டு முக்கிய கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பதினோறாம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவர், கடந்த 5 ஆண்டுகளாக அவருடைய தந்தை, அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் என 28 பேர் பாலியல் வன்புணர்வு செய்ததாக காவல்நிலையத்தில் தனது தாயுடன் வந்து அளித்த புகாரை அடுத்து இரு பெரும் கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், சிறுமியின் தந்தை உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்புணர்வு விவகாரங்களுக்கு ஒரு முடிவே இல்லை போலும், ஆனாலும் இது போன்ற பாலியல் குற்றங்கள் நடப்பது சமூகத்தின் கொடூர மனநிலையை தோலுரித்து காட்டுவதாக அமைகிறது.
ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தந்தையே, பெற்ற மகள் என்றும் பாராமல் பாலியல் வன்புணர்வு செய்ததுடன், தனது மகளை பிறரையும் பாலியல் வன்புணர்வு செய்ய வைத்து அவரின் வாழ்க்கையையே சீரழித்து இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதாகும் அந்த சிறுமி தற்போது பதினோறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் 12ம் தேதியன்று தனது தாயுடன் சதார் கோட்வாலி காவல்நிலையத்திற்கு வந்து தந்தை உள்ளிட்ட 28 பேர் தன்னை 5 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து வருவதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அதன்படி, அந்த சிறுமி 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆறாம் வகுப்பு படித்து வந்த போது அவரது தந்தை செக்ஸ் வீடீயோக்களை காட்டி பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். பின்னர் நகரில் உள்ள பல ஓட்டல்களுக்கு அழைத்துச் சென்று அவர் கைகாட்டும் நபர்களுடன் உல்லாசமாக இருக்கச் செய்துள்ளார். இது குறித்து தாயிடம் கூறக்கூடாது என மிரட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் தாயிடம் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கவே, தற்போது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 10 வயது மகனுக்கும், தனது கணவர் பாலியல் துன்புறுத்தல் அளித்து வருவதாக சிறுமியின் தாய் கூறினார்.
இதனிடையே அச்சிறுமி உறவினர்கள், அரசியல் பிரபலங்கள் என 25 பேரின் பெயரையும், 3 பெயர் தெரியாத நபர்கள் குறித்தும் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ஓட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த 3 பேரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதில் சமாஜ்வாதி கட்சியின் லலித்பூர் மாவட்டத் தலைவர் திலக் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் தீபக் அக்ரிவார் மற்றும் பொறியாளர் மகேந்திர துபே உள்ளிட்டோர் அடங்குவர். சிறுமி குறிப்பிட்ட மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் சிறுமி குறிப்பிட்ட ஓட்டல்களுக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து விசாரித்து வருகின்றனர். கைதான மாவட்ட தலைவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சிறுமியை தந்தை, உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் சீரழித்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்த உலுக்கியிருக்கிறது.